search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிகேசவ பெருமாள் கோவில்"

    • தாயாரும், பெருமாளும் திருமணத்தடைகளை நீக்கி அருளுகிறார்கள்.
    • நினைத்தவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ளது, நெடுமரம் என்ற பழம்பெருமை வாய்ந்த கிராமம். இங்கு வானுயர்ந்த கோபுரத்தோடும், மதில் சூழ்ந்தும் மகாவிஷ்ணு திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில், சுவாமி `ஆதிகேசவப் பெருமாள்' என்ற திருநாமத்துடனும், தாயார் `அம்புஜவல்லி' என்ற பெயருடனும் அருள்பாலிக்கின்றனர். சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்திருத்தலத்தின் ராஜகோபுரம் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.

     ஐந்துநிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், விளக்குத்தூண், பலிபீடம், கொடிமரம் உள்ளன. அதைத் தொடர்ந்து கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. இந்த கருடாழ்வாருக்கு எதிரே இருபுறமும் நாகர்களும், விநாயகரும் காட்சி தருகிறார்கள். கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உற்சவரான ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் முன் மண்டபத்தில் காட்சி தருகிறார். வெளியே மூலவரை நோக்கி ஒரு சிறு சன்னிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார்.

    முன்மண்டபத்தில் ஒரு சிறிய சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். தாயாரின் உற்சவர் திருமேனியும் அருகிலேயே அமைந்துள்ளது. மறுபுறத்தில் ஆண்டாள் காட்சி தந்து அருளுகிறார். அருகில் ஆண்டாளின் உற்சவ திருமேனி காணப்படுகிறது. லட்சுமிநாராயணர் மற்றொரு சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். இச்சன்னிதியில் ஸ்ரீசக்கரமும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். இத்தலத்தில் விகனச முனிவருக்கு சிறு சன்னிதி உள்ளது. விகனசரின் உற்சவத் திருமேனியும் அருகில் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் விகனசருக்கு ஐந்து வைணவத்தலங்களில் மட்டுமே சன்னிதி அமைந்துள்ளது. அதில் ஒன்று இந்த ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாலயத்தில் உடையவர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மணவாளமாமுனிகள், விஷ்வக்சேனர் முதலான ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் எழுந்தருளியுள்ளனர். அருகில் பக்த ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். வெளிச்சுற்றுப் பிரகாரத்திலும் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.

    தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் இத்தலத்து ஆதிகேசவப் பெருமாள் நிறைவேற்றி வைக்கிறார். இத்தலத்து தாயாரும், பெருமாளும் திருமணத்தடைகளை நீக்கி அருளுகிறார்கள். இத்தலத்தினை ஒன்பது முறை வலம் வந்து தாயாரையும், பெருமாளையும் வேண்டிக்கொண்டால், நினைத்தவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விகனசரின் அவதார மகோத்சவம் இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி, விஜயதசமி, பரிவேட்டை உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் உற்சவம், போகித்திருநாளில் திருமஞ்சனம், பங்குனி உத்திரம், கிருஷ்ண ஜெயந்தி முதலான பல விழாக்கள் இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தலம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

     அமைவிடம்

    கல்பாக்கத்தில் இருந்து கூவத்தூர் மார்க்கமாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து ஏராளமான பேருந்துகள், நெடுமரம் கிராமம் வழியாகச் செல்லுகின்றன. கல்பாக்கத்தில் இருந்து செய்யூர் செல்லும் நகரப் பேருந்தில் பயணித்தும் நெடுமரத்தினை அடையலாம்.

    • ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நிர்மால்யம், அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஆதிகேசவ பெருமாளின் பாதத்தில் பூஜைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடி மர பீடம் அருகே கொடி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் தந்திரி கோகுல், தங்க கொடி மரத்தில் கொடியேற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் முரளிதரன் நாயர், குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் அன்னதானம், இரவு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    இதையடுத்து விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மதியம் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், இரவு சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த ஜூலை 6-ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவட்டார் ஆதிகேச வப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்ப டுவது வழக்கம்.

    ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான நாளை (23-ந்தேதி) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் திருக்கொடியேற்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 2-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி நடைபெறுகிறது.

    3-ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராய ணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியன நடக்கிறது. 4-ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி.

    5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றுதல், தொடர்ந்து கருடவாக னத்தில் சுவாமி பவனி வருதல், நள சரிதம் கதகளி ஆகியனவும், 6-ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியனவும், 7-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல் தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

    8-ம் நாள் இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 9-ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் நாள் (நவம்பர் முதல் தேதி) காலை 6 மணிக்கு ராமாயாண பாராயணம், காலை 11 மணிக்கு திருவி லக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு தளியல் ஆற் றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

    விழாவுக்குகான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

    • கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டது
    • திருவிழா நிறைவு பெற்றது

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் இந்த கோவிலில் கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த சிறப்புத்திருவிழா நேற்று சுவாமி ஆராட்டுடன் நிறைவடைந்தது.

    108 வைணவத்திருப் பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 22 நீள கடுசர்க்கரை யோக படிமத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 6-ந்தேதி கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. அத்துடன் அருகில் உள்ள சாஸ்தா சன்னதி, குலசேகரப்பெருமாள் சன்னதியிலும் கும்பாபி ஷேகம் நடந்தது. கும்பாபி ஷேகத்துக்குப் பின்னர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி புதியதாக தங்கக்கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை ஆறுநாள் திருவிழாவுக்காக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் சுவாமி நாற்காலி வாகனம், அனந்த வாகனம், கமலவாகனம், பல்லக்கு வாகனம் ஆகியவற்றில் பவனி வருதல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன் தினம் கோவில் வெளியே அரச மரம் அருகில் சாமி பள்ளி வேட்டைக்குச்செல்லும் நிகழ்வு நடந்தது.

    நேற்று கோவில் ஆராட்டு விழாவுக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை வழக்கமான பூஜைகள் நடந்தது. மதியம் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் புடை சூழ பறளியாறு பாயும் கிழக்குக்கடவிற்கு ஆராட்டுக்கு எழுந்தருளினார்.

    திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் வாகனத்தின் முன் சென்றார். அப்போது வானம் இருண்டு மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாகனத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பறளியாற்றில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆறாட்டு, நிவேத்யம், தீபாரா தனையைத் தொடர்ந்து சுவாமி கோவிலுக்குத் திரும்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப் பட்டது. மதியம் அன்ன தானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருத்த லங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கோவிலில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி வனப்பகுதியில் இருந்து கடந்த 2017 ஆண்டு சுமார் 70 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான தேக்கு மரம் கொடி மரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அந்தக் கொடி மரத்தில் எண்ணையை ஊற வைத்து கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் நிறுவப்பட்டது. கும்பாபி ஷேகத்திற்காக 200 கிலோ செம்பு பயன் படுத்தி 42 கலசங்கள் உருவாக்கப்பட்டது.

    இந்த கலசங்கள் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் உருவாக்கப்பட் டது. பின்னர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை கிலோ தங்க முலாம் பூசப்பட்டு வெள்ளியில் செய்யப்பட்ட 2 அடி உயரம் கொண்ட கருடாழ்வார் சிலையும் செய்யப்பட்டு அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டது.

    இப்போது அந்த கருடாழ்வார் சிலை கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது அதனையும் சேர்த்து 72 அடி உயரம் கொண்ட இந்த கொடிமரம் உள்ளது குமரி மாவட்டத்தில் அதிக உயரம் கொண்ட கொடி மரம் இந்த கொடி மரமாகும் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உச்ச பூஜை ஆகிய பூஜைகள் செய்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணமும் அதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அத்தாழ பூஜை, அவஸ்சிராவம் தெளித்து ஸ்ரீ பூதபலி பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், ஸ்ரீசாஸ்தா கோவில் ஸ்ரீ குலசேகரபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் உபதேவன்மார் களுக்கு பிரதிஷ்டையும் நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு கோவிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது இரவு 7 மணிக்கு திருவட்டார் ஆரபி கலாலயம் குழுவி னரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து கும்பாபிஷேக பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று கொடிமரத்துக்கு மாட்டுவதற்கு தயார் செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு கணபதிஹோமம், அதிவாசம்விடர்த்தி, உஷபூஜை, உச்சபூஜை, அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காணி மடம் மந்திராலயம் யோகிராம் சூரத்குமார் அவர்களின் காணி ஞானி நாமரிஷி தபஸ்வி பஜனை நடை பெறுகிறது.

    நேற்று மாலை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை வந்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பாதைகள், அன்னதானம் நடைபெறும் இடம், பக்தர்கள் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றை பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறநிலையத்துறை என்ஜினியர் ராஜ்குமார், கோவில் கண்காணிப்பாளர் ஆணந்த் கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோவிலில் மாட்டப்படும் கண்காணிப்பு கேமராக்கள், பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவட்டார் பேரூராட்சி மூலம் தினமும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி ஆகியவற்றையும் தினமும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் காலை மாலை வேளைகளில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மை படுத்தி வருகிறார்கள். பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், செயல் அலுவலர் மகராஜன் ஆகியோர்களின் மேற்பார்வையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    கோவில் தந்திரி சஜித்சங்கரநாராயணகுரு மற்றும் அவருடன் பொறுப்பில் இருந்த சுப்ரமணியகுருவிற்கும் குடும்ப சூழல் காரணமாக பூஜைகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில் தந்திரி அவகாசம் கொண்ட வஞ்சியூர் அத்தியற மடத்தை சார்ந்த கோகுல்தந்திரி இரவு பொறுப்பேற்று கொண்டார் அவரின் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது இன்று நான்காம் நாள் பூஜை நடைபெறுகிறது.

    இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், முளபூஜை, நாயசாந்திஹோமம், சோர சாந்திஹோமம், ஹோமகலசாபிஷேகங்கள், உச்சபூஜை, ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6-மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு பிம்ப பரிக்கிரகம், ஜலாதிவாசம், அக்ஷஹோமம், குண்ட சுத்திஹோமம் முளபூஜை, அத்தாழ பூஜை, ஆகிய பூஜைகளும் 6.30க்கு தீபாராதனை நடைபெறுகிறது.

    திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ குலசேகர பெருமாள் சன்னதிகளில் பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திருவனந்த புரம் பாரத கலா ஆர்ட் அக்காடமியின் டாக்டர் பிந்துலெக்ஷ்மியின் கிருஷ்ணகதா நடனம் நடைபெறுகிறது.

    கிருஷ்ணன் கோவிலில் தயார் ஆன 7 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ பலி விக்கிரகம் மற்றும் கோவில் விமானத்தில் பொருத்தப்பட வேண்டிய 7 தங்க முலாம் பூசப்பட்ட கும்பகலசங்கள் உபய தாரரிடம் நேற்று மாலை ஆற்றூர் கழுவன் திட்டையில் ஒப்படைக்கபட்டது.

    பின்னர் அலங்கரிக் கப்பட்ட வாகனத்தில் சென்டை மேளம் முளங்க முத்துக்குடையுடன் கும்பகலச ஊர்வலம் புறப்பட்டது.

    திருவட்டார் பாலம் தபால் நிலைய சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு வழியாக கோவில் மேற்குவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த 7 ஆண்டுகளாக சாமி சிலைகள் பாலாலய சன்னதியில் இருந்து வந்தது. தற்போது கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி அங்கிருந்த சிலைகள் கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டன. பாலாலய சன்னதியில் இருந்த சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று சிவன் சன்னதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

      கன்னியாகுமரி:

      திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜூலை) 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

      கோவில் கருவறை விமானம், உதய மார்த்தாண்ட மண்டபம், மேற்கூரை, அஷ்ட பந்தன காவி பூசப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கலசங்கள் பொருத்தப்பட உள்ளது. கிருஷ்ணன் கோவிலில் செம்பிலான கும்ப கலசங்கள் உருவாக்கப்பட்டு ஒசூரில் தங்க முலாம் பூசுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.

      ஒசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. கருவறை மூலவர் சன்னதியின் மேற்பகுதியில் 5 கலசங்களும், ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல்பகுதி கூரையில் ஒரு கலசமும் உதய மார்த்தாண்ட மணடபத்தின் மேல் ஒரு கலசமும் பொருத்தப்பட உள்ளது. முக்கிய கலசம் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. ஒசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நிறைவடைந்ததும் கும்ப கலசங்கள் திருவட்டாருக்கு கொண்டு வரப்பட்டு விமானத்தில் பொருத்தப்படும்.

      கோவில் பிரமாண்டமாக இருப்பதாலும், கோவில் வளாகத்தில் போதிய இட வசதிகள் குறைவாக இருப்பதாலும் கும்பாபி ஷேகத்தை பக்தர்கள் நேரில் காண்பதில் சிரமங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்புறங்களில் பல இடங்களில் பெரிய அளவிலான் எல்.இ.டி. டிவி.கள் அமைக்க அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. எந்தெந்த இடங்களில் அகன்ற திரை டி.வி.க்கள் வைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

      நேற்று சுவாமியின் பாதத்தில் பூஜையில் வைக்க ப்பட்ட கும்பாபி ஷேக விழா அழைப்பிதழ் பக்தர்களுக்கு வினி யோகிக்கப்பட்டது. முதல் அழைப்பிதழை அறநிலையத்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து பக்தர்களுக்கு அழைப்பிதழ் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகன் குமார், வள்ளலார் பேரவை பத்மேந்திரா சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு மற்றும் மகாதேவன் ஆகியோர் குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். திருவட்டார் நான்குமுனை சந்திப்பிலிருந்து கோவில் வரை குண்டு குழிகளுடன் இருந்த சாலைப்பகுதி நேற்று சரி செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

      • இன்றும், நாளையும் சுகிர்த ஹோமம் நடக்கிறது
      • திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெறுகிறது

      கன்னியாகுமரி:

      திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் ஜூலை 6-ந்தேதி நடைபெற உள்ளது.

      இந்நிலையில் பக்தர்கள் திரட்டிய நிதி ரூ.15 லட்சம் செலவில் புதியதாக வெள்ளியிலான கமலவாகனம் மற்றும் அனந்த வாகனம் ஆகியன நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தில் உரு வாக்கும் பணி கடந்த 6 மாத காலமாக நடந்து வந்தது.

      வாகனம் அமைக்கும் பணி முடிவடைந்து நேற்று காலை சிற்பி செல்வராஜ் தலைமையில் சிறப்பு பூஜைக்குப் பின்னர் மினி லாரியில் ஏற்றி திருவட்டார் தளியல் கருடாள்வார் சன்ன திக்கு கமல வாகனங்கள் கொண்டு வரப்பட்டது.

      பின்னர் மாலையில் சிறப்பு தீபாராதனை யைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ, நாம ஜெபத்துடன் ஊர்வலகமாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு வாகனங்களை கொண்டு வந்தனர். அங்கு கோவிலை வலம் வந்த பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் இரு கமல வாகனங்களும் கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

      கோவிலில் பல்வேறு பரிகார பூஜைகள்நடந்து வந்த நிலையில் இன்றும், நாளையும் காலை முதல் மதியம் வரை சுகிர்த ஹோமம் நடைபெறுகிறது.

      அணுகு சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.

      கன்னியாகுமரி:

      108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமும் ஆகிய திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் 400 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் ஜூலை மாதம் 6ந்தேதி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

      இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மடப்பள்ளி சீரமைப்பு பணி ஆகியன நடந்து வருகிறது. கோயில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்து விட்டது.

      கோயில் வெளிப்பிரகார பாதையில் போடப்பட்டிருந்த கற்கள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததால் அவற்றை மாற்றுவதற்கு மோட்டார் உதவியுடன் சாதாரண கல்லாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

      தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது. அதன்படி பூஜைகள் பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டது.

      பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி நேற்று துவங்கியது. இதற்காக ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

      வருகிற 29-ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. ஜூன் 30.ந்தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின்னர் எடுத்துச்செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு பூஜைகள் நடைபெறும்.

      ஜூலை மாதம் 5.ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். 6-ந்தேதி காலை 5.10 முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6.00 மணி முதல் 6.50க்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் குலசேகரப்பெருமாள் கோயில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்.

      ஜூலை 9.ந்தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடைபெறும். திருவட்டார் பஸ்நிலையம் முதல் நான்கு முனை அணுகு சாலையில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலை குண்டு குழிகளுடன், இருபுறமும் புதர்கள் மண்டி மோசமான நிலையில் உள்ளது.

      அதுபோல் திருவட்டார் சந்தை அருகே ஈனாச்சி அம்மன் கோயிலிருந்து ஆதி கேசவ பெருமாள் கோவில் வரையுள்ள அணுகு சாலையும் குண்டு குழிகளுடன் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை செப்பனிட்டால் தான் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வரமுடியும்.

      கும்பாபிஷேகத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த அணுகு சாலைகளை விரைந்து செப்பனிட அதிகாரிகள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ×